மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு தனித்துவமான நடிகர். கேரளா கடந்து பிற மாநிலங்களும் இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன. OTT-யின் வருகைக்குப் பிறகு இவருக்கு இன்னும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இவருடைய சமீபத்திய படங்களான 12த் மேன், நேரு போன்ற படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அடுத்ததாக இவருடைய நடிப்பில் “மலைக்கோட்டை வாலிபன்” படம் மாபெரும் எதிர்பார்ப்போடு வெளியாக உள்ளது. பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இப்படத்தை இயக்கியுள்ளார். காவியத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் மோகன்லால் தன்னுடைய அடுத்த படத்துக்காக பிரபல மூத்த இயக்குனர் சத்யன் அந்திக்காடு என்பவருடன் இணைந்துள்ளார். 1982 ம் ஆண்டு வெளியான “குருக்கன்ட்டே கல்யாணம்” எனும் படம்தான் இவர் இயக்கிய முதல் திரைப்படம். அதைத்தொடர்ந்து இன்று வரை மலையாள சினிமாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் பகத் பாஸில் நடிப்பில் வெளியான “ஞான் பிரகாசன்” படத்தையும், ஜெயராம் நடிப்பில் வெளியான”மகள்” படத்தையும் இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து இவர் மோகன்லாலின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. பொதுவாகவே இவருடைய படங்கள் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய டிராமா வகை படங்களாகத் தான் இருந்துள்ளன. அந்த வரிசையில் மோகன் லாலுடன் இணையும் புதிய படமும் டிராமா வகை படமாகத் தான் உருவாக உள்ளதாம். மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க உள்ளார்.