மோகன்லால் இயக்கி நடிக்கும் பரோஸ்… வெளியீட்டு தேதி அறிவிப்பு…
மலையாள திரையுலகில் லாலேட்டனாக அனைவராலும் கொண்டாடும் நாயகன் மோகன்லால். 80-களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ப கதைக்களத்தையும் தேர்வு செய்து சிறந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. மலையாளத்தில் வசூலைக் குவித்த இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் ஆனது. மோகன்லால் நடிப்பில் இறுதியாக நேரு, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படங்கள் வெளியாகின.
இதனிடையே மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு திரைப்படம் பரோஸ். ஜிஜோ புன்னூஸ் எழுதிய ஒரு நாவலை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் மோகன்லால் நடிக்க மட்டும் இல்லை, இப்படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் மாயா, சீசர் ராடன், கல்லிரோய் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குழந்தைகளை கவரும் விதமாக உருவாகும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லிடியன் நாதஸ்வரம் படத்திற்கு இசை அமைக்கிக்கிறார். 3டி-தொழில் நுட்பத்தில் இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களை பாதுகாத்த, பாதுகாவலர் பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதை தான் இத்திரைப்படம் ஆகும். இந்நிலையில், இப்படம் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.