தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் இயக்குனர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் கடைசியாக அரண்மனை 4 எனும் ஹாரர் திரில்லர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து சுந்தர். சி கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேசமயம் கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளார் சுந்தர். சி. இதற்கிடையில் தான் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இயக்குனர் சுந்தர். சி தான் இந்த திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. தற்போது இதனை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகை நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தில் அம்மனாக நடித்திருந்தார். அதன் பின்னர் தற்போது மீண்டும் அம்மனாக சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.