விடுதலை திரைப்படத்திற்கு பின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கபடும். அதன் பின் வடசென்னை-2 தொடங்கப்படும் என்று வெற்றிமாறன் கூறினார்.
இயக்குநர்களை தலைவா என்று கூறுவது ஏற்புடையது அல்ல என கூறினார் வெற்றிமாறன். வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர் என்று இளையராஜா புகழாரம். நடிகர்களுக்கு சமமாக தற்போது இயக்குநர்களை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் என்றார் நடிகர் சூரி.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை பாகம்-1 திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்பட படக்குழு பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கலந்து கொண்டனர். விழாவுக்கு இளையராஜா தாமதமாக தான் வந்தார். பின்னர், விடுதலை பட பாடல் வெளியீடு நடைபெற்றது.
இயக்குநர் வெற்றிமாறன் மேடையில் பேசுகையில்,
விடுதலை படத்தின் தொடக்கம் ராஜா சார் தான். அவரை சந்தித்து பேசும் போது, கதையை கேட்டார். அவருக்காக 45 நிமிடங்கள் படமாக்கி காட்டினேன். அதைப்பார்த்து வழி நெடுக காட்டுமல்லி பாடலை எழுதினார்.
என் உணர்வு வார்த்தையாக மாறி ஒலியாக மாறி வந்தது. அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது.
இசைஞானி இளையராஜா மேடையில் பேசுகையில்,
இந்த படம், திரை உலகம் சந்திக்காத படம், வெற்றிமாறனின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதைகளை கொண்டது, கடலில் வரும் அலை எப்படி மாறி மாறி வருகிறது அதுபோலவே தான் இந்த கதையும்.
ஒவ்வொரு அலையும் வெவ்வேறு அலையே. அதுபோல வெவ்வேறு திரைக்கதையை வெற்றிமாறன் உருவாக்குவது பெருமையாக இருக்கிறது. 1,500 படங்களில் வேலை பார்த்த அனுபவத்தில் கூறுகிறேன், வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்.
இந்த படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என்று இளையராஜா கூறினார்.
சிறப்பு விருந்தினரான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மேடையில் பேசுகையில்,
வெற்றிமாறனை பார்க்க விடுதலை படப்பிடிப்பு தளத்துக்கே செல்வேன். இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த நடிகர்கள் கேட்டபோது கூட, வாடிவாசல் முடித்துவிட்டு கூறுகிறேன் என்று கூறினார் வெற்றிமாறன். ராஜமவுலி கூறுகிறார் எனக்கு பிடித்த இயக்குநர் வெற்றிமாறன் தான் என்று கூறினார். இப்படிப்பட்ட புகழை தட்டிக்கொடுக்கும் மாதிரி இளையராஜா இன்று கூறி இருக்கிறார்.
இந்த வெற்றிமாறனுக்கு வாடிவாசல் திறந்திருக்கிறது. விடுதலை வெற்றிவாகை சூடும். ஈடு இணையில்லாத வெற்றியை அடையும் இந்த படம்.
சிறப்பு விருந்தினரான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மேடையில் பேசுகையில்,
நான் பல படங்களில் வேலை பார்த்துள்ளேன். ஆனால் அதற்கான revenue ஒரு சில படங்களில் கிடைத்ததில்லை. வெற்றிமாறன் எந்த வகையில் படமெடுத்தாலும் அதை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த படத்தை என் மனைவி பார்த்து விட்டார். நானும் பார்க்க காத்திருக்கிறேன்.
பொன்னியின் செல்வன் மாதிரி விடுதலை மாபெரும் வெற்றி அடைய வேண்டும். தமிழ் சினிமா Golden Period ஐ நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படம் அதில் பெரிய மகுடமாக அமையும் என கூறினார்.
நடிகர் சூரி மேடையில் பேசுகையில்,
இதுவரை காமெடியானாக தான் மேடை ஏறி இருக்கிறேன். முதல் முறையாக நாயகனாக மேடை ஏறி உள்ளேன். இளையராஜா இசையில் உருவான படத்தில் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநருக்கு நான் நன்றி சொன்னால் மட்டும் பத்தாது. என் குடும்பமே நன்றி சொல்ல வேண்டும்.
சினிமாவில் அனைவரையும் ஊக்குவித்து முன்னோக்கி தள்ளுவதில் விஜய் சேதுபதி போல் வேறு யாரையும் பார்த்ததில்லை. பட வாய்ப்பு தேடி கொண்டிருந்த போதில் இருந்து தற்போது வரை எனக்கு விஜய் சேதுபதி ஆதரவளித்து வருகிறார்.
எல்லாரும் ஒரு இலக்கை நோக்கி ஓடுவார்கள். இந்த படம் எதிர்பார்க்காத மிகப்பெரிய வாய்ப்பு. இதை என்றும் மறக்க மாட்டேன் என்று மகிழ்ச்சியாக கூறினார்.
படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் 600 பேர் வேலை பார்ப்பார்கள். அடர்வனக்காடு தளத்துக்கு எங்களை கடத்திச் செல்வது போலவே இருக்கும். அந்த கார், வண்டிகளுக்கு போடப்பட்ட டீசல் பணத்தில் ஒரு படமே செய்துவிட்டு போகலாம் என்று கூறிய சூரி தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்தார்.
நடிகர்களுக்கு சமமாக தற்போது இயக்குநர்களை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அப்படியான வரிசையில் வெற்றிமாறனும் இருக்கிறார். உங்களிடம் நடித்த பின் வேறு யாருடைய கேமிராவில் நான் நடித்தாலும் தப்பித்து விடுவேன். வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி என்று கூறினார் சூரி.
நடிகர் விஜய் சேதுபதி மேடையில் பேசுகையில்,
சூரி மிக அழகான நடிகன். சூரியின் பேச்சில் நான் மயங்கி விட்டேன். 8 நாள் என அழைத்துச் சென்று ஏமாற்றியவர் தான் வெற்றிமாறன். வடசென்னையில் நடிக்க வேண்டியது, தவறவிட்டு விட்டேன் என்று கூறி வருத்தப்பட்டார் நடிகர் விஜய் சேதுபதி.
விடுதலைக்காக 8 நாள்கள் கூட்டிச் சென்று Audition செய்துள்ளார் இயக்குநர். வெற்றியுடன் வேலை பார்த்த அனுபவம் மிகவும் அறிவுசார்ந்தது. ஒரு படத்தின் வழியாக மக்களுக்கு எதை கடத்த போகிறேன் என்பதில் பொறுப்பாக செயல்படக்கூடிய அற்புதமான மனிதர் வெற்றிமாறன்.
ராஜா சார் பேசும் போது அவரை பேச அனுமதியுங்கள் என அறிவுரை கூறினார், அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் மேடையில் பேசுகையில்,
சினிமா நடிகர்களை தலைவா என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அதுபோல இயக்குநர்களுக்கும் ஏற்புடையது அல்ல.
இந்த படம் அனைத்திலும் மிகப்பெரிய challenge ஆக இருந்தது. அதை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
க்ளைமாக்ஸ் படமாக்கப்படும் போது, சூரிக்கு அடிப்பட்டது. இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.
எனக்கு ரொம்ப கோவம் வரும். அதை பொறுத்துக்கொண்ட உதவி இயக்குநர்களிடம் நன்றியோடு சேர்த்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தை 4 கோடி பட்ஜெட்டில் முடிக்க நினைத்தேன். ஆனால் நினைத்ததை விட பட்ஜெட் எகிறி விட்டது என்று தெரிவித்தார்.
வேலை பார்ப்பது சாதாரண கஷ்டம் கிடையாது. உடல்ரீதியாக சூரிக்கு இந்த படம் மிகப்பெரிய Challenge. அவ்வளவு Dedication. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை பாரதிராஜா தான் செய்ய வேண்டியதாக இருந்தது. அதன் பின் இந்த கதாபாத்திரத்துக்காக எனக்கு தோன்றியது விஜய் சேதுபதி தான்.
முதலில் படப்பிடிப்பில் எப்படி எடுப்பதென்று எனக்கும் தெரியவில்லை. அதனால் அன்றைய நாட்கள் எனக்கும் Audition தான். 8 நாள் என ஆரம்பித்தது 65 நாள் விஜய் சேதுபதியை வைத்து படமாக்கினோம்.
முதல் பாகத்தை விட 2-ம் பாகத்தில் தான் அவருக்கான காட்சிகள் அதிகம் வருகிறது. இன்று இருக்கும் நடிகர்களுக்கு ஒரு Role model விஜய் சேதுபதி. Comfort zone இல் பழகிய நடிகர்களுக்கு விடுதலை படம் ஒரு Challenging தான்.
இப்போது வரைக்கும் இந்த படம் வந்ததற்கு காரணம், என்னுடன் இருக்கும் படக்குழு தான். விடுதலை படத்துக்கு பின் வாடிவாசல் திரைப்படமும், வாடிவாசலுக்கு பின் வடசென்னை-2 திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கப்படும் என்று வெற்றிமாறன் அறிவித்தார்.