கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் நானும் ரெளடி தான் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். அதன் பிறகு விக்னேஷ் சிவன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். காது கேளாதவராக நடித்திருந்த நயன்தாராவிற்கும் இந்த படம் நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த சமயத்தில்தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் சில வருடங்கள் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த அளவிற்கு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. எனவே இவர்களின் திருமண வீடியோவை ஆவண படமாக வெளியிட திட்டமிட்டிருந்த நயன் – விக்கி தம்பதி நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் தங்களின் திருமண வீடியோவை பல கோடி மதிப்பிற்கு விற்பனை செய்தனர். அதன்படி வருகின்ற 18ஆம் தேதி நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. அதன்படி சமீபத்தில் டிரைலரும் வெளியிடப்பட்டு கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் நயன்தாரா தரப்பில் நீளமான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷை குற்றம் சாட்டியிருந்தார். அதாவது நடிகர் தனுஷ், நயன் – விக்கி தம்பதியின் காதல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்த நானும் ரெளடி தான் படப்பிடிப்பு காட்சிகளை ஆவணப்படத்தில் இணைப்பதற்காக அனுமதி தரவில்லை என்றும் அதற்காக அவர் இரண்டு வருடங்களாக தங்களை அலையவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தனுஷ், ட்ரைலரில் இடம் பெற்ற நானும் ரெளடி தான் படத்தின் 3 வினாடி காட்சிகளுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஜெர்மன் சொல் ஒன்றை குறிப்பிட்டு நடிகர் தனுஷ், மற்றவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து சந்தோஷப்படும் ஒரு சைக்கோ என்பது போல சுட்டிக்காட்டி இருந்தார். எனவே நயன்தாரா – தனுஷ் விவகாரம் தான் பல ஊடகங்களில் இன்றைய தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் தனுஷுக்கு நயன்தாரா தான் துரோகம் செய்துவிட்டார் என்று புதிய அப்டேட் வெளியாகி வருகிறது. அதாவது நானும் ரெளடி தான் படத்தின் போது நயன் – விக்கி இருவரும் காதல் வயப்பட்ட நிலையில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க இருந்த படத்தை அதிக பட்ஜெட்டுக்கு இழுத்து விட்டதாக தனுஷ் அப்பொழுதே விக்னேஷ் சிவனை எச்சரித்துள்ளார். அதன் பின்னர் நயன் – விக்கி திருமணத்திற்கு தனுஷை அழைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே கடந்த சில வருடங்களாகவே நயன்தாரா – தனுஷுக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் தற்போது ஆவணப்படத்தை பயன்படுத்தி அதை பெரிதாக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டது நானும் ரெளடி தான் படத்தின் போது ஏற்பட்ட நஷ்டத்திற்காக தான் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவன், ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் காட்சிகளை இணைக்க தடையில்லா சான்று வழங்குமாறு தனுஷிடம் நேரடியாக அனுமதி கேட்காமல் தனுஷிடம் பணிபுரியும் நபரிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர், தனுஷை கேட்காமல் தடையில்லா சான்று வழங்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஆகையினால் அதிக தொகைக்கு தங்களின் ஆவணப்படத்தை விற்க முடியாத காரணத்தினாலேயே நடிகர் தனுஷை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கார்னர் பண்ணுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இந்த விவகாரத்தில் ரசிகர்கள் சிலர் நயன்தாராவிற்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் தனுஷுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.