கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்சன் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளைப் பெற்ற இப்படம் ஓடிடியில் வெளியான பின்பும் ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த வகையில் இந்த படத்தைப் பற்றி ரசிகர்கள் பலரும் தற்போது வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோவிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் நித்திலன் சாமிநாதன். எனவே அடுத்ததாக நித்திலன் சாமிநாதன் என்ன படம் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின் படி இவருடைய அடுத்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. தற்போது கிடைத்த கூடுதல் தகவல் என்னவென்றால் நயன்தாரா நித்திலன் கூட்டணியில் உருவாக உள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் படத்திற்கு மகாராணி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.