நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் நெட்ஃப்ளிக்சில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் இந்து மத மக்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து இத்திரைப்படம் நீக்கப்பட்டது. இந்த விவகாரத்தின் அடுத்த கட்டமாக நெட்ஃப்ளிக்ஸ் தரப்பிலிருந்து படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு அடுத்த 8 மணி நேரத்திற்குள் புதிய காட்சிகளை படமாக்கித்தர வேண்டும். இல்லையெனில் நஷ்ட ஈடாக ரூபாய் 12 கோடியை நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அன்னபூரணி படமானது நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்கு 19 கோடிக்கு மட்டும் தான் விற்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஓடிடி தளங்களுக்கு படத்தை விற்பதில் இத்தகைய சிக்கல்கள் இருப்பதால் பிற ஓடிடி நிறுவனங்களும் ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன்படி இனிமேல் படத்தினை டிஜிட்டல் உரிமையை வாங்கும் பொழுது ஒப்பந்தம் போடப்பட்டு அதில் இப்படத்தை பற்றி, வரும் காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் எழும் பட்சத்தில் பட தயாரிப்பாளர், அந்தப் படம் எவ்வளவு தொகைக்கு டிஜிட்டல் தளத்தால் வாங்கப்பட்டதோ அந்தத் தொகையை நஷ்ட ஈடாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதிக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளதாம். இந்தச் செய்தி படத் தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே முன்னணி ஓடிடி நிறுவனங்கள் படங்களை குறைவான விலைக்கு பேரம் பேசி தான் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் செய்தி தயாரிப்பாளர்களிடையே மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.