மலையாள திரையுலகின் முடிசூடா மன்னராக வலம் வருபவர் மோகன்லால் மற்றும் மம்முட்டி. ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகின்றனர். அது மட்டுமன்றி இயக்குநர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாடுடன் பணியாற்றுவதில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இருவரும் சிறந்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த படங்களை மலையாளத்தில் மட்டுமன்றி மற்ற மொழிகளிலும் வாங்கி வௌியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1980-ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்குபவர் மோகன்லால். ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் த்ரிஷ்யம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்ட அந்தந்த மொழிகளிலும் படம் வசூல் வேட்டை நடத்தியது. தமிழில் கமல் நடித்த பாபநாசம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல, 2021-ல் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது.
மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் நெரு. இத்திரைப்படம் வரும் 21-ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து பேசிய மோகன்லால், எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்த மாட்டேன். எந்த விமர்சனங்களாலும் 46 ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளிவிட முடியாது என தெரிவித்து உள்ளார்.