தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா எப்படி தனது இசையினால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தாரோ அதேபோல் யுவன் சங்கர் ராஜாவும் தனது தனித்துவமான இசையின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா ஒரு தயாரிப்பாளராகவும் படம் வருகிறார். அந்த வகையில் இவன் தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே ப்யார் பிரேமா காதல், மாமனிதன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தில் கடந்தாண்டு வெளியான ஜோ படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தட்டி தூக்கிய ரியோ ராஜ் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜோ படத்தில் நடித்திருந்த மாளவிகா மனோஜ் அல்லது அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி இருவரில் யாரேனும் ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அறிமுக இயக்குனர் ஸ்வினித் என்பவர் இயக்க இருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரியோ ராஜ், ஜோ படத்தின் வெற்றிக்கு பிறகு மேலும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதன் படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.