பிரபல தெலுங்கு நடிகை நிஹாரிகா கொனிடேலா, தமிழில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளார்.
ரங்கோலி படத்தை இயக்கிய வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் மெட்ராஸ்காரன். பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம், இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகிறார். எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மலையாளத்தில் அனைவரின் கனவத்தை ஈர்த்த கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ் ஆகிய திரைப்படங்களில் நிகம் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். தற்போது இவர் நடிக்கும் மெட்ராஸ் காரன் திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் கலையரசன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் மாறி மாறி ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகியாக பிரபல தெலுங்கு நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இத்திரைப்படத்தில் நிஹாரியா நாயகியாக நடித்திருப்பார். இது தான் அவர் நடித்த முதல் தமிழ் படமாகும்.
இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும், இணைய தொடர்களிலும் நிஹாரிகா நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகேர்ந்தி பாபுவின் மகள் ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒரு வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிஹாரிகா, தமிழ் பக்கம் திரும்பி இருக்கிறார்.