Homeசெய்திகள்சினிமாஓடிடி செயலியில் “அயலி” - என்னதான் சொல்லியிருக்காங்க?

ஓடிடி செயலியில் “அயலி” – என்னதான் சொல்லியிருக்காங்க?

-

“அயலி” ஒட்டுமொத்த ஓடிடி ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்துள்ள வெப் சீரிஸ் எனும் தொடர்… இல்லை படம்… இல்லையில்லை பாடம் என்றே சொல்லலாம்….

ஜீ5 ஓடிடியில் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி மெகா ஸ்டார் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு போலவே தமிழகம், ஆந்திராவில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது அயலி… இது மட்டுமின்றி சப் டைட்டில் இருப்பதால் அண்டை மாநில ரசிகர்களும் அதிகம் அயலி தொடரை பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

அப்படி என்னதான் கருத்து சொல்லி இருக்கிறார்கள் இந்த தொடரில் என்பதை பார்ப்போம்…

பெண்கள் வயதுக்கு வந்தால் முதல் தண்டனை பள்ளிக்கு செல்லக்கூடாது… இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும். இது கடவுளின் உத்தரவு என்ற மூட நம்பிக்கையில் தொடங்குகிறது அயலி. ஏன் இப்படி ஒரு விநோதமான கட்டுப்பாடு என்றுதானே உங்களது கேள்வி….

சரி இந்தக் கதையை பொறுத்தவரை அயலி என்பது கிராமத் தெய்வத்தின் பெயர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலித்து ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு கிராமத்தில் வறட்சி ஏற்படுகிறது. கால்நடைகள் உயிரிழக்கின்றன. நோய் பாதிப்புகள் பலருக்கு ஏற்படுகிறது.

இதை அடுத்து சாதி மாறி காதலித்து காதல் ஜோடி ஓடிச் சென்றதால்தான் இதுபோன்ற அசம்பாவிதம் நடப்பதாகவும் இது தெய்வக் குத்தம் என்றும் ஊருக்குள் சிலர் புரளியை கிளப்பிவிட ஒட்டு மொத்த கிராமமே அந்த ஊரைவிட்டு காலி செய்து பக்கத்து கிராமத்தில் தஞ்சம் அடைகிறது. மேலும் தங்கள் கிராமத்தில் இருந்த அயலி தெய்வத்தின் பிடிமண்ணை எடுத்து செல்லும் மக்கள் புதிய கிராமத்தில் வைத்து வழிபடத் தொடங்குகின்றனர்.

அதுமட்டுமா,  இனி தங்களது ஊரில் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக்கூடாது, உடனே திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் இல்லையென்றால் தெய்வக் குத்தம் ஆகிவிடும் என்பது போல கட்டுப்பாடுகள் தங்களுக்குள்ளே விதித்துக் கொள்கிறார்கள்.

இந்த பிரச்சனைகளுக்கு நடுவேதான் கதையின் நாயகி தமிழ்செல்வி தான் எப்படியாவது படித்து டாக்டராகிவிட வேண்டும் என கனவுகளோடு பள்ளிக்கூடம் செல்கிறாள். ஆனால் மற்ற பெண்கள் போல திடீரென பூப்பெய்திவிட அதை தாயுடன் சேர்த்து மறைத்து எப்படி வாழ்க்கையை நகர்த்துகிறாள் என்பதே கதையின் கரு.

இக்கதையில் ஒட்டு மொத்த பெண் குழந்தைகளும் தங்களது கல்வி கனவை சிதைத்துவிட்டு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரமாக மாற்றப்படுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது படக்குழு.

ஒரு பெண் விடுதலை அடையவேண்டுமென்றால் அவள் கையில் இருக்கும் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் என்ற பெரியாரின் தத்துவத்தின் சாரம்சம்தான் இந்த படம் என்றே சொல்லலாம்….

மேலும் இந்த விஷயங்கள் மூட நம்பிக்கை என கூறினால் அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிப்பதே முதலில் பெண்கள்தான் என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது கதையின் இன்னொரு சிறப்பம்சம்…

“இந்த கிராமத்தில் பசங்க 10வது பாஸ் பண்ணமாட்டாங்க… பொண்ணுங்க பரிட்சை எழுதவே வரமாட்டாங்க” என்ற வசனம் பள்ளிக்கூடத்திலேயே சொல்வது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்த தொடரை முத்துக்குமார் இயக்க அபிநட்சத்திரா, அனுமோல், மதன், சிங்கம் புலி, லிங்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆனாலும் இந்த தொடர் சினிமாவாக திரையரங்குகளில் வெளியாகாமல், நகரத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளதால் எந்த அளவிற்கு கிராமங்களில் இன்னும் மூடநம்பிக்கையில் மூழ்கிகொண்டிருக்கும் மனிதர்களுக்கு சென்றடையும் என்பதே பிரதான கேள்விக்குறி…?

“அயலி” தெய்வத்தின் பெயர் மட்டுமல்ல… பெண்ணின் கனவு…

MUST READ