பேச்சி திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
பிரபல நடிகை காயத்ரி சங்கர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அடுத்ததாக புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். அடுத்ததாக இவர் பேச்சி எனும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் காயத்ரி சங்கருடன் இணைந்து நகைச்சுவை நடிகர் பால சரவணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ராமச்சந்திரன் எழுதி இயக்கி இருக்கும் நிலையில் ராஜேஷ் முருகன் படத்திற்கு இசையமைத்திருந்தார். பார்த்திபன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படமானது கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பால சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் இப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் கண்டு களித்துள்ளனர். படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வரும் நிலையில், இந்த வெற்றியை படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.