நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா நடிப்பில் கங்குவா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் ஹை பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து பாபி தியோல், நட்டி நட்ராஜ், திஷா பதானி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. எனவே இப்படம் வெளியாகும் நாளில் மட்டும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது பொதுவாக பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தான் கூடுதல் காட்சிக்கான அனுமதி வழங்கப்படும். ஆனால் கங்குவா திரைப்படம் வெளியாகும் நவம்பர் 14ஆம் தேதியையொட்டி எந்த பண்டிகை நாட்களும் இல்லை என்பதால் சிறப்பு காட்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இது தொடர்பாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கங்குவா படக் குழு, தமிழக அரசிடம் அதிகாலைக் காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமாறு கோரிக்கை வைத்திருந்ததாக சொல்லப்பட்டது. அதன்படி நடிகர் சூர்யா , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாக உதவி கேட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் தான் கங்குவா சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க உதவியதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.