கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பூகம்பமாக வெடித்து வரும் ஒரே விஷயம் மன்சூர் அலிகான் – திரிஷா விவகாரம் தான். மன்சூர் அலிகான், திரிஷா குறித்து பேசிய சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டது. அதே சமயம் மன்சூர் அலிகான் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக த்ரிஷா, குஷ்பூ லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நடிகை திரிஷா இனிமேல் மன்சூர் அலிகானுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று கூறினார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “பெண் என்பவள் புனிதமானவன். தாய்க்கு சேவை செய்வது சொர்க்கம் என்று இறைவன் கூறி இருக்கின்றான். காரணத்துடன் தான் பெரியார் ஆண்மையை அழியுங்கள் என்று கூறினார். என் தாய் என்னை சினிமா பார்க்க விடாமல் பத்தாம் வகுப்பு வரை வளர்த்தார். இறைவன் இனிமேல் என்னை சகோதரத்துவத்துடன் இம்மண்ணில் உழைக்க அருள் புரிய வேண்டும்.
என் சக திரை நாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு. உன் திருமணம் நடைபெறும் போது நான் உன்னை ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் எனக்கு தர வேண்டும்” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.