சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31-ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மறைந்த ராணுவ வீரர் முகந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வரும் இந்தப் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாகவும் இந்து – முஸ்லீம் மதத்தினருக்கிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன்படி சமீபத்தில் ராஜ்கமல் நிறுவனத்தின் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு அமரன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அமரன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.