பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியால் இந்திய அளவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக மாறியவர் பிரபாஸ். இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி தற்போது இந்திய அளவில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. பாகுபலி படங்கள் பிரபாஸுக்கு பெரிய வெற்றி படங்களாக அமைந்த போதிலும் அடுத்து வெளியான சாஹோ, ராதே ஷியாம், ஆதி புரூஷ் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக கே ஜி எஃப் திரைப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார், நடிகையர் திலகம் படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD போன்ற படங்கள் வரிசை கட்டி உள்ளன. இந்நிலையில் 2024 செப்டம்பரில் பிரபாஸின் ஸ்பிரிட் படம் வெளியாகும் என படத்தின் இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர் தான் சந்திப் ரெட்டி வங்கா. இந்தியில் ஷாஹித் கபூரை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்தார். இப்படத்தின் வெற்றியால் அடுத்ததாக ரன்பீர் கபூரை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அனிமல் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக சந்திப் ரெட்டி வங்கா பிரபாஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகவுள்ளார். பிரபாஸின் 25 ஆவது படமான இந்த படத்திற்கு ஸ்பிரிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரபாஸ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது. இச்செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது சம்பந்தமான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.