பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும், படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மலையாள திரையுலகில் லாலேட்டனாக கொண்டாடப்படும் மோகன்லாலின் மகன் தான் பிரணவ் மோகன்லால். இவரது நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹிருதயம். இப்படத்தில் தர்ஷனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். வினித் ஸ்ரீனிவாசன் இப்படத்தை இயக்கிருந்தார். தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் வகையில் எழுதப்பட்ட இந்த திரைப்படம், மாபெரும் ஹிட் அடித்தது. கேரளா மட்டுமன்றி தமிழகத்திலும் ஹிருதயம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற ஒனக்க முந்திரி பாடல் பட்டி தொட்டி எங்கும் அதிரடி கிளப்பியது.
தற்போது ஹிருதயம் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்கி உள்ளது. வருஷங்களுக்கு ஷேஷம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.