நடிகர் விஜய் கடந்தாண்டு வெளியான லியோ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கி இருக்கும் நிலையில் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என அறிவித்திருந்தார். அதன்படி விஜயின் 69வது திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் தளபதி 69 படம் தொடர்பான அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதாவது ஏற்கனவே இந்த படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. பின்னர் நடிகர் மோகன்லால் அல்லது கமல்ஹாசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இதன் புதிய தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து பிரேமலு பட நடிகை மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதாவது நடிகர் விஜய்க்கு மகளாக நடிக்க இருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை மமிதா பைஜூ பிரேமலு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதே சமயம் இவர் தமிழில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விஷ்ணு விஷாலுடன் புதிய படம் ஒன்றில் நடித்து வரும் இவர் நடிகர் அதர்வாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் திடீரென அப்படத்தில் இருந்து மமிதா பைஜூ விலகிவிட்டார் எனவும் தளபதி 69 திரைப்படத்தில் நடிப்பதற்காகவே அந்த பட வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார் எனவும் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.