அடடா… காதலர் தினத்திற்கு மீண்டும் வெளியாகும் பிரேமம்…
மலையாளத்தில் மாபெரும் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படம் காதலர் தினமன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் சத்தமே இல்லாமல் அமைதியாக வெளியான திரைப்படம் பிரேமம். அல்போன்ஸ் புத்ரன் இப்படத்தை இயக்கினார். பான் இந்தியா அளவில் ஹிட் அடித்த திரைப்படம் ‘பிரேமம்’. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, தமிழகத்திலும் படத்தை வெளியிட்டனர். காதலர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து கேரள ரசிகர்கள் மட்டுமன்றி கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களின் கவனமும் மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியது.
இத்திரைப்டத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர் நிவின்பாலி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாத கதைக்களம், மற்றும் கதாபாத்திரங்கள் இப்படத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. காட்சிகளுக்கு இடையே இயற்கை எழில் கொஞ்சும் தருணங்கள் இடம்பெற்றிருந்தது அனைவரும் ரசிக்கும்படியாக இருந்தது. இப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்தனர். இதில் நாக சைதன்யா, ஸ்ருதி ஹாசன், அனுபமா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு பிரேமம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். கேரளா மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் பிரேமம் திரைப்படம் ரி ரிலீஸ் ஆகிறது.