பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சண்டை, கலவரங்கள் போன்றவை இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. மேலும் சீரியல்களை விட இந்நிகழ்ச்சிக்கு தான் டிஆர்பியும் அதிகம் ஏறும். இவ்வாறு இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பக்கம் ஆதரவு கிடைத்தாலும் மறுபக்கம் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி கையில் கொடி மற்றும் பேனர்களுடன் கூட்டம் கூட்டமாக போராடி வருகின்றனர். ஆண்டுதோறும் இதுபோன்ற எதிர்ப்புகள் கிளம்பினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசன்களையும் கடந்து அடுத்த சீசனுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலமான பின்பு தூத்துக்குடி மாவட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராகவும், தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதத்தில் இருப்பதாகவும் கூறி மத்திய , மாநில அரசுகளுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.