அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பில் முதல் பாகமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய அளவில் இந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் தேசிய விருதையும் வென்றிருக்கிறார். இதன் இமாலய வெற்றியை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை (புஷ்பா தி ரூல்) உருவாக்கி வருகிறார் சுகுமார். இதில் அல்லு அர்ஜுன், பகத் பாஸில், ராஷ்மிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதற்கிடையில் இந்த படமானது 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத காரணத்தால் இந்த படமானது 2024 டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.