லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் இணைந்து இருக்கும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையில் பிறந்து இன்று கோலிவுட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த தனிப்பெரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இவரது திரைப்பயணம் தொடங்கியது. யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல், முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட இயக்குர் லோகி. மாநகரம் படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகரிடம் அழைத்துச் சென்றது. கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமன்றி அவரை முன்னணி இயக்குநராகவும் கொண்டு சேர்த்து.
இதையடுத்து விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்திருப்பார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் உருவான இத்திரைப்படம் ஹிட் அடித்தது. இறுதியாக லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜூன், கௌதம் மேனன் உள்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வௌியானது.
இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படத்தை லோகேஷ் கனராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜூம், நடிகை ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ள புகைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதனால், புதிய படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.