ரஜினி – ஞானவேல் கூட்டணியில் உருவாகும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் தயாராக உள்ளது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை பறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.