கலைஞர் என்று தமிழ் மக்களால் கொண்டாடப்படுபவர் திரு. கருணாநிதி. இவர் தன்னுடைய வாழ்நாளில் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அந்த வகையில் தனது 17 வயதிலேயே திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுத ஆரம்பித்தவர். ராஜகுமாரி, மலைக்கள்ளன் என கிட்டத்தட்ட 75 திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதியுள்ளார். அதே சமயம் பல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை இவரால் படைக்கப்பட்டவை. அதே சமயம் தனது தனித்துவமான படைப்புகளினால் திரையை ஆண்டது மட்டுமல்லாமல் அரசியலிலும் களமிறங்கி ஐந்து முறை தமிழகத்தையும் ஆண்டவர். அந்த வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் பட்டம் பெற்ற அரசியல்வாதி என்ற பெருமை கருணாநிதியையே சேரும். இந்நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் உடல் மெரினாவில் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2021 இல் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற உடன் மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசின் சார்பில் ரூ. 39 கோடி மதிப்பில் கருணாநிதியின் நினைவிடம் கட்டப்பட்ட நிலையில் அதனை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தத் திறப்பு விழாவில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதே சமயம் வைரமுத்து, ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ” இந்த நினைவிடத்தை கலைஞர் நினைவிடம் என்று சொல்வதைவிட கலைஞரின் தாஜ்மஹால் என்று தான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.