சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு
73 வயதிலும் பிஸியாக நடித்து வரும் ரஜினி திடீரென நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது முதுகு வலி, அடி வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை 6 மணி முதல் மருத்துவர்கள் சிலர் ரஜினியை கண்காணித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ரஜினியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.