நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடிக்கும் தேதி மற்றும் இடம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து லால் சலாம் டப்பிங் பணிகளை ரஜினி நிறைவு செய்துள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது. மேலும், லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.