நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைப்பதே அவருக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும் என்று நடிகர் ராம்கி தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர் பின்னர் பேசியது, ஆபாவாணன் இயக்கத்தில் செந்தூரப் பூவே என்ற படம். அதில் விஜயகாந்தின் கதாபாத்திர பெயர் கேப்டன். அந்த படத்தில் அவருக்கென்று ஒரு பெயர் கிடையாது. படப்பிடிப்பின்போது அப்படி கூப்பிட்டு கூப்பிட்டு எங்களுக்கெல்லாம் ‘கேப்டன்’ என்றே பழகிவிட்டது. அதன்பிறகு, கேப்டன் பிரபாகரன் படம் நடித்த பிறகு அந்த பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது. அதுமட்டுமே காரணம் இல்லை. அப்போதெல்லாம் ஹீரோக்கள் பொது பிரச்சனைகள் தலையிட மாட்டார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், எந்த பிரச்சினையாக இருந்தாலும், முதலில் களத்தில் இறங்கி நிற்பவர் விஜயகாந்த். அவருக்கு அது குறித்த கூச்சமோ பயமோ இருக்காது.
நடிகர் சங்கத்தில் இருந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து, கடன்களை அடைத்து அதனை ஒரு நேரான பாதைக்கு கொண்டு வந்த பெருமை விஜயகாந்த்தையே சேரும். எல்லா நடிகர்களும் தலைவனாக ஏற்றுக் கொண்ட ரியல் கேப்டன் அவர். அவரது குணத்தினாலும், திறமையினாலும்தான் அவருக்கு இந்த பெயர் கிடைத்தது. செந்தூரப் பூவே படத்தில் ஒரு ஆக்ஷன் காட்சியின்போது அவரது தோள்பட்டை மூட்டு கழன்றிவிட்டது. ஒரு 10 நிமிடம் வலியால் துடித்தவர், பின்னரே அவரே தானாக சரி செய்துகொண்டு மொத்த காட்சிகளையும் முடித்துக் கொடுத்திவிட்டு சென்றார் என குறிப்பிட்டார். இத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்தின் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு வைப்பது நன்றியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.