இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணம், தொலைக்காட்சி தொடர், அனிமேஷன், திரைப்படம் எனப் பல்வேறு வடிவங்களில் வெளியாகியுள்ளது. இருப்பினும் ராமாயண கதைகள் மற்றும் கிளை கதைகளை மையமாக வைத்து தங்களுடைய ஸ்டைலில் பலரும் மீண்டும் மீண்டும் படமாக்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகவுள்ள ராமாயண கதையில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கவுள்ளனர் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன. பொதுவாகவே ராமாயணம் படத்தில் ராமனாக நடிக்க பல கதாநாயகர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.ஆனால் ராவணன் கதாபாத்திரம் மிக்க சவாலான ஒன்றாகும். எப்போதுமே ராமாயண கதையில் ராவணனாக நடிக்கப் போகும் கதாபாத்திரம் யார் என்பதின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எரிமலையாக வெடிக்கும்படியாக ஒரு மாஸ் ஹீரோவை களமிறக்கி உள்ளனர் பட குழுவினர். படத்தில் கே ஜி எஃப் படங்கள் மூலம் பான் இந்திய ஸ்டாரான கன்னட நடிகர் யஷ் ராவணனாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. யஷ் தற்போது “டாக்ஸிக்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் ராமாயண கதையில் யஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ராமாயண படத்தின் படப்பிடிப்புகள் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நித்திஷ் திவாரி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.