தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2014 இல் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராட்சசன் திரைப்படத்திற்காக இணைந்த இந்த கூட்டணி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று, ராட்சசன் படமானது க்ரைம் திரில்லர் படங்களிலேயே முக்கியமான இடத்தையும் பிடித்தது. அடுத்ததாக விஷ்ணு விஷால், ராம்குமார் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. விஷ்ணு விஷாலின் 21வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் பகுதியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்காவது முறையாகவும் ராட்சசன் பட கூட்டணி இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் ராம்குமார், முண்டாசுப்பட்டி படத்தின் போது மற்ற நடிகர்களிடம் சென்று கதையை கூறி இருக்கிறார். ஆனால் யாரும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளாத நிலையில் விஷ்ணு விஷாலிடம் பேசி அவரை வைத்து முண்டாசுப்பட்டி படத்தை இயக்கினார். அதன் பிறகும் கிரைம் திரில்லர் படமான ராட்சசன் பட கதையையும் பல நடிகர்களிடம் கூறி அதன் பின்னர்தான் விஷ்ணு விஷாலிடம் சென்றார் ராம்குமார். இப்போது மூன்றாவது முறையாகவும் அது போல தான் நடந்திருக்கிறதாம். எனவே இந்த முறை விஷ்ணு விஷால், ராம்குமாரிடம் உங்களின் அடுத்த படத்திற்கு வேறு யாரிடமும் செல்ல வேண்டாம். ஆரம்பத்திலேயே என்னிடம் வந்து விடுங்கள். நான் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன் என்று கூறியுள்ளாராம். இயக்குனர் ராம்குமாரும் தனது அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம். இதனால் வருங்காலத்தில் விஷ்ணு விஷால், ராம்குமார் கூட்டணியில் நான்காவது படமும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் ராட்சசன் 2 படத்திற்காகவும் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.