குழந்தை நட்சத்திரமாய் சிறு தீப்பொரியாய் தமிழ் சினிமாவில் நுழைந்து இன்று எரிமலையாக நிமிர்ந்து நிற்பவர் நடிகர் சிம்பு. சிம்பு என்றாலே சர்ச்சைகள் தான் என்னும் அளவிற்கு ஏகப்பட்ட தடைகள் இவரை சூழ்ந்த போதிலும் இன்றும் தன்னைத்தானே நிரூபித்துக் கொண்டு நிலைத்து நிற்பவர். அதேசமயம் சிம்பு ஒரு சிறந்த நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த பாடகராகவும் வலம் வருகிறார்.டி ராஜேந்தரின் வாரிசு என்னும் அடையாளத்தோடு 1984ல் உறவைக் காத்த கிளி படத்தின் மூலம் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டாராகவே மாறினார். பின்னர் விடலை பருவத்தில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்து கலக்கினார். இவருடைய ஸ்டைலும், துள்ளலான நடிப்பும், நடனமும் 90s கிட்சை தூண்டில் போட்டு அவர் வசம் இழுத்தது. தொடர்ந்து இளசுகளின் மத்தியில் காதல் மன்னனாக வலம் வந்தார். விரல்களை ஆட்டி இவர் வசனம் பேசும்பொழுது தியேட்டரில் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து ஏழு முகமாக இருந்த இவரது வளர்ச்சி சில காரணங்களால் தடைபட்டது. பல குற்றச்சாட்டுகள் இவர் மீது வைக்கப்பட்டு படங்களில் நடிக்க தடைவிதித்து ரெட் கார்டும் போடப்பட்டது. சில ஆண்டுகளாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த சிம்பு உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போனார். இவரது தோற்றத்தை பார்த்து பலரும் விமர்சனம் செய்தனர். அவ்வளவுதான் இவர் கதை முடிந்து விட்டது என பரவலாகவே பேசப்பட்டது. குண்டான தோற்றத்துடனே செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து மிக கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் என்ற படத்தில் ஸ்லிம்மான தோட்டத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். இவர் அடுத்தபடியாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் STR 48 படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர். பீரியாடிக் படமாக உருவாகும் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னை ஒவ்வொரு விஷயத்திலும் மெருகேற்றி, தான் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து ரியல் பீனிக்ஸ் பறவை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார் சிம்பு. இன்று சிம்பு தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் நாமும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.