”நடிகர் சைஃப் அலிகான் உண்மையில் குத்தப்பட்டாரா? அல்லது நடிக்கிறதா?” என மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கேள்வி எழுப்பியுள்ளார். “கான் நடிகர்கள் சிக்கலில் இருக்கும்போது” மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த நடிகர்களை பற்றி கவலைகளை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மர்ம நபரால் தாக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து சைஃப் அலி கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து புனேவில் நடந்த ஒரு நிகழ்வின் போது பேசிய அமைச்சர் ரானே, “சைஃப் அலி கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு நான் அவரை கவனித்து வருகிறேன்.அவர் உண்மையில் குத்தப்பட்டாரா? அல்லது நடிக்கிறாரோ? என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது.’கான் நடிகர்கள்’ சிக்கலில் இருக்கும்போது மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த நடிகர்களுக்காக கவலைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
ஷாருக்கானின் மகனுக்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் பரிந்து பேசினார். சைஃப் அலி கானைப் பற்றி சுப்ரியா சுலே கவலைப்படுகிறார். அவர்கள் எந்த இந்து கலைஞரைப் பற்றியும் கவலைப்படுவதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு ஜிதேந்திர அவாத்தோ,அல்லது பாராமதி எம்பி சுப்ரியா சுலேவோ ஏன் வரவில்லை..? என அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனவரி 16 ஆம் தேதி, சைஃப் அலிகானின் பிளாட்டில் திருடும் நோக்கத்துடன் நுழைந்த ஒரு நபரால் குத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றவாளியின் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத். வங்கதேசத்தைச் சேர்ந்தவர். அவர் தானேயில் கைது செய்யப்பட்டார்.முன்னதாக, ”வங்கதேசத்தினர் மும்பை துறைமுகத்தில் தங்கியிருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் வீடுகளுக்குள் நுழையத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை அவர்கள் சைஃப் அலிகானை அழைத்துச் செல்ல வந்திருக்கலாம்” என்று ரானே கூறினார்.
ஜனவரி 16 ஆம் தேதி ஷெஹ்சாத் சைஃப் அலி கானின் வீட்டிற்குள் திருடும் நோக்கத்துடன் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சைஃப் அலிகானின் இளைய மகன் ஜெஹ்வின் அறையில் ஒரு வீட்டு வேலைக்காரரால் அவர் காணப்பட்டபோது நிலைமை மோசமடைந்தது.ஊழியர்கள் கூச்சல் போட்டனர்.இதனால் சைஃப், ஊடுருவிய நபரை தடுக்க முயன்றார். வாக்குவாதத்தின் போது, சைஃப் அலிகானை அந்த நபர் பலமுறை கத்தியால் குத்தினார். அதில் சைஃப் அலிகானின் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரது முதுகில் சிக்கிய கத்தியின் ஒரு துண்டை அகற்றவும், முதுகெலும்பு திரவம் கசிவதைத் தடுக்கவும் உடனடி அறுவை சிகிச்சை செய்தனர்.