Homeசெய்திகள்சினிமாதமிழ் மக்கள் கொண்டாடிய தங்கமகன் தவறினார்.... உருக்குலைந்த ரசிகர்கள்...

தமிழ் மக்கள் கொண்டாடிய தங்கமகன் தவறினார்…. உருக்குலைந்த ரசிகர்கள்…

-

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் காலூன்றியது தனி வரலாறு. கமல், ரஜினி எனத் தொடங்கி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் உள்ளூர் இளைஞன் போல் காரசாரமாக களத்தில் இறங்கினார் விஜயகாந்த்.

ஆஹா… நம்ம ஆளுய்யா…. என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டார்கள் தமிழ் ரசிகர்கள். தனக்கென ஸ்டைல், பவுடர் பூச்சு இல்லாத பேச்சு, முரட்டு சண்டை, பக்கத்து வீட்டு இளைஞன் என்கிற மாதிரி மனதோடு ஒட்டிக் கொண்டார் விஜயகாந்த். கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வேரூன்றியவர் கேட்பாரற்று இருந்த திரைப்பட கல்லூரி மாணவர்களை வாரி அணைத்து வாய்ப்புக் கொடுத்து வெளியே கொண்டு வந்தார்.

1952-ல் ஆக்ஸ்ட் மாதம் 25-ம் தேதி மதுரையில் பிறந்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜயராஜ் என்ற இயற்பெயரை கொண்ட இவர் சினிமாவிற்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். சிறு வயதில் இருந்தே சினிமா தீராக்காதல் கொண்ட காரணமாக பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பை தாண்ட முடியவில்லை. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு தந்தையின் அரிசி ஆலையில் அவர் பணிபுரிந்தார். நண்பர்களின் உதவி கொண்டு, மதுரையிலிருந்து சென்னை வந்த விஜயகாந்துக்கு தொடக்கத்தில் கிடைத்தது அனைத்தும் அவமானங்கள்…அசிங்கங்கள் மட்டுமே. அவரது நிறத்தை பலரும் கேலியாக பேசி சிரித்தனர். ஆனால் உழைப்பை மட்டுமே நம்பிய விஜயகாந்திற்கு நிறமும், முகமும் ஒரு தடையாக இருக்கவே இல்லை.

பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு அப்பால், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் விஜயகாந்த். சட்டம் இருட்டறை, அம்மன்கோவில் கிழக்காலே, சிவப்பு மல்லி, தூரத்து இடிமுழக்கம் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் ஒரே ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை செய்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் என மிகப்பெரும் ஆளுமைகள் தமிழ் சினிமாவில் இருந்த காலகட்டத்தில், உள்ளூர் இளைஞனாக தோன்றி கோலிவுட் கோட்டையில் தன் கொடியையும் பறக்கவிட்டவர் நடிகர் விஜயகாந்த். நம்ம அண்ணன் என அனைவரும் அள்ளி அணைத்துக்கொள்ளும் விதமாக தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றார் நடிகர் விஜயகாந்த். தனி ஸ்டைல், பவுடர் இல்லாத முகம், முரட்டு சண்டை, பவர்புல் பேச்சு என தனக்கென தனி பாதை அமைத்து, தனக்கென தனி பட்டாளத்தையும உருவாக்கியவர் விஜயகாந்த். புதுக்கதை, புது முகம் என படத்திற்கு படம் வித்தியாசம் பார்த்து தமிழ் சினிமா. அப்போதே சினிமாவில் வேரூன்றினார். கடனில் சிக்கித் தவித்த நடிகர் சங்கத்தை, அதிலிருந்து மீட்டு எடுத்தார். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் நிறைந்த நடிகர்களை ஒன்று சேர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி அனைத்து கடனையும் தீர்த்து வைத்த பெருமை விஜயகாந்தையே சாரும். தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989-களில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, “ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டைத் தவிர்த்தார்.

2000-ம் ஆண்டு, தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் பெற்றனர். 2002–ல் `ராஜ்ஜியம்’ படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின. அப்படி, விஜயகாந்தின் இந்த அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொண்டதாலேயே ஆளும் அரசியல் கட்சிகள் அவருக்குப் பல நெருக்கடிகளை கொடுத்தனர். அதே சமயம், அரசியலுக்கு வர, சரியான களத்துக்காக, காரணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த். 2005-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி, “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” எனும் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். அதிலும் சொன்னபடி ஆச்சர்யத்தை நடத்திக் காட்டினார் தே.மு.தி.க தலைவர். முதல் தேர்தலிலேயே அவர் 28 லட்சம் ஓட்டுக்களை வேட்டையாடினார்.

எல்லோரும் பயந்து நடுங்கிய ஜெ. ஜெயலலிதாவிடமே சட்டமன்ற அரங்கில் நேருக்கு நேராக துணிச்சலாக விவாதம் செய்து அரங்கையே அதிர வைத்தார். `கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன்’ எனக் குமுறினார் ஜெ. தெருவில் வந்து இறங்கும் துணிவும், இறங்கி உதவும் கனிவுமே விஜயகாந்தின் வெற்றிக்கு ரகசியமாய் இருந்தது. சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி விஜயகாந்தின் அதிரடி ஆளுமைக்கு அப்ளாஸ் அள்ளும்.

ஒரு சாமான்யனாக சினிமாவுக்குள் வந்து சாதித்த பின்னணி, தமிழக அரசியலையே ஒரு காலக்கட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த துணிவான எதிர்க்குரல் அவருக்கே சொந்தம். மக்களோடு இருப்பது, மக்களுக்காக இருப்பது, மக்கள் மொழியை பேசுவது என இயல்பாக மாறியவரை உடல் நலம் பாதித்தது. அவ்வப்போது அதை சரி செய்து அரசியலுக்காக தொடர்ந்து பயணமும், நடந்தது. ஒரு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.கவின் கூட்டணிக்காக இரண்டு கழகங்களும் அலையாய் அலைந்து திரிந்ததெல்லாம் அரசியல் வரலாறு. அப்போது, அவர் உடல்நிலை மேலும் நிலைகுலைந்தது. வெளிநாடுகளுக்கு சென்றும் பார்த்த சிகிச்சைகள் பலன் கொடுக்கவில்லை.

கேப்டன் விஜயகாந்த்

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இதைத் தொடர்ந்து விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மியாட் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த். தேமுதிக கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் திடமாக கலந்து கொண்டார். இதைக் கண்ட ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்தனர். விஜயகாந்த் அவரது செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராத விதமாக தமிழ் சினிமாவின் தங்க மகன் விஜயகாந்த், இன்று எதிர்பாராத விதமாக காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வெள்ளைச் சிரிப்புக்கு, பெருங் கோபத்திற்கு, இயல்பாக வெடிக்கும் வார்த்தைக்குக் கூட இப்போது ஏங்கி நிற்கிறார்கள் தமிழ் மக்கள். நல்ல மனுஷன்யா என்று வித்தியாசம் பார்க்காமல் அத்தனை பேரும் அவரது மறைவின் பாரத்தை தாங்க முடியாமல் தடுமாறி நிற்கின்றனர்.

MUST READ