தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, போலீஸ் அனுமதி பெறாமல், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா-2 திரையிடப்பட்ட தியேட்டருக்கு வந்ததாக குற்றம் சாட்டினார். நெரிசலில் சிக்கி ஒரு பெண் இறந்த பிறகும், நடிகர் திரையரங்கத்தை விட்டு வெளியே வரவில்லை என்றும், அதைத் தொடர்ந்து போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றதாகவும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார். ஒரு வீடியோவை மேற்கோள் காட்டி, கூட்டத்தில் அல்லு அர்ஜுன் ரோட் ஷோ செய்ததற்காகவும், அப்போது மக்களுடன் கைகுலுக்கியதற்காகவும் முதல்வர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், ரேவந்த் ரெட்டி எனது கேரக்டரை படுகொலை செய்ததாக அல்லு அர்ஜுன் குற்றம் சாட்டியுள்ளார். டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 திரையிடப்பட்டபோது, அல்லு அர்ஜூன் வந்ததால் நெரிசலில் சிக்கி 39 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு ஒரு இரவை அவர் சிறையில் கழிக்க வேண்டியதாயிற்று.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி சட்டசபையில் இந்த விவகாரத்தை எழுப்பினார். ஓவைசியின் கேள்விக்கு, ரேவந்த் ரெட்டி, ‘‘அல்லு அர்ஜுன் ஒரு ரோட் ஷோ நடத்தி கூட்டத்தை கை அசைத்ததாக’’ குற்றம் சாட்டினார்.
‘‘தியேட்டர் நிர்வாகம் டிசம்பர் 2-ம் தேதி காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. இதில், டிசம்பர் 4ஆம் தேதி அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் வருகையையொட்டி பாதுகாப்பு கோரப்பட்டது. கூட்டத்தை நிர்வகிப்பதில் உள்ள சிரமங்களை காரணம் காட்டி போலீசார் அனுமதியை நிராகரித்துள்ளனர். தியேட்டருக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் முன், அல்லு அர்ஜூன் தனது காரின் சன்ரூப்பை இறக்கி கூட்டத்தை நோக்கி கை அசைத்தார். இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பார்க்க சலசலத்தனர்.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட பிறகு, அவரைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றேன். சம்பவத்தில் காயமடைந்த போதிலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனைச் சந்திக்க கூட அல்லு அர்ஜூன் அனுதாபம் காட்டவில்லை. மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என திரையுலக பிரமுகர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் எந்த சலுகையும் வழங்கப்படாது. பொதுமக்களை துன்புறுத்துபவர்களை அரசு சும்மா விடாது’’ என்றார்.
நடிகர் அல்லு அர்ஜுன் ‘‘அனுமதியின்றி சந்தியா தியேட்டருக்கு செல்லவோ அல்லது ரோட் ஷோ நடத்தவோ இல்லை என மறுத்துள்ளார். எனது குணாதிசயங்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது’’ என்றார். தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியின் அறிக்கைக்கு சில மணி நேரங்களிலேயே உணர்ச்சிவசப்பட்ட அல்லு அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். ‘‘நிறைய தவறான தகவல்கள், பொய்யான குற்றச்சாட்டுகள், தகவல் தொடர்பு இடைவெளி அதிகம் உள்ளது. நிறைய தவறான விளக்கங்கள் உள்ளன. நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. தயவுசெய்து என்னை நியாயந்தீர்க்காதீர்கள். தயவு செய்து என் குணத்தை தாக்காதீர்கள். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.
அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். ஆனால் எந்த நபரையோ, தலைவரையோ, அரசாங்கத்தையோ குற்றம் சொல்லவில்லை. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதில் யாருடைய தவறும் இல்லை. 20 வருடங்களாக இத்துறையில் இருப்பதாகவும், நல்ல நம்பகத்தன்மை என்னை ஒரே இரவில் சேதப்படுத்தி விட்டது வருத்தமாக உள்ளது.
நான் அனுமதியின்றி தியேட்டருக்கு சென்றது முற்றிலும் தவறான தகவல். நான் தியேட்டருக்கு வந்ததும், போலீஸ் கூட்டத்தை அகற்றிக்கொண்டிருந்தது. எல்லாம் சரியாகிவிட்டது என்று தெளிவாகத் தெரிந்தது. அனுமதி இல்லாவிட்டால் அவர்களிடம் சொல்லிவிட்டு நான் திரும்பிச் சென்றிருப்பேன். ரோடு ஷோ அல்லது ஊர்வலம் எதுவும் செல்லவில்லை. திரையரங்கில் இருந்து சில அடி தூரத்தில் இருந்த கூட்டத்தினரை நோக்கி கார் செல்ல வழிவகை செய்யப்பட்டது’’ என அவர் கூறினார்.