ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த காந்தாரா திரைப்படமானது, அதல பாதாளத்தில் இருந்த கன்னட சினிமாவை இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது. சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இமாலய வெற்றி பெற்றது. தெய்வ நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் மையக்கருவாகக் கொண்டு ஒரு சாதாரண கதையம்சம் கொண்ட படமானது, படமாக்கப்பட்ட விதம் மற்றும் பின்னணி இசை என தொழில் நுட்ப காரணங்களால் வேறு ஒரு பரிமாணத்தில் பார்வையாளர்களை சென்றடைந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு போயினர். அந்த அளவுக்கு எதார்த்தமாகவும் நல்லதொரு சினிமாவாகவும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது காந்தாரா. காந்தாரா படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் காந்தாரா 2 படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் காந்தாரா 2 படமானது காந்தாரா நடைபெறும் காலகட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் கதையாக உருவாகும் என ஏற்கனவே படக் குழுவினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி இந்த படம் கிபி 301 – 400 காலகட்டத்தில் நடைபெறும் கதைய அம்சங்களை கொண்டிருக்குமாம். இது காந்தாரா முதல் பாகத்தின் ப்ரீக்குவலாகவும் 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறதாம். செய்திகள் வெளியாகி வருகிறது. அதே சமயம் ரிசப் ஷெட்டி நிறைய ஆராய்ச்சிகளுக்கு பிறகு காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை முடித்துவிட்டாராம். காந்தாரா 2 படத்தின் பூஜை விரைவில் தொடங்க இருப்பதாகவும் படப்பிடிப்பு டிசம்பரில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, நவம்பர் 27 , பிற்பகல் 12.25 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது காந்தாரா படத்தின் ப்ரீக்குவல் என்பதால் காந்தாரா தி லெஜன்ட் சேப்டர் 1 என இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இது வெறும் ஒளி மட்டும் அல்ல. இது தரிசனம்”எனும் வரிகள் இந்த அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.