நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் 1981 காலகட்டத்தில் இருந்தே இயக்குனராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தன் மகன் விஜயின் நடிப்பிலும் செந்தூரப்பாண்டி, ஒன்ஸ்மோர், விஷ்ணு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதே சமயம் சமீபகாலமாக நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2018 இல் எஸ் ஏ சந்திரசேகர் நடிப்பில் வெளியான டிராபிக் ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேற்று விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 பட விழாவில் கலந்து கொண்ட எஸ் ஏ சந்திரசேகர் இன்றைய காலகட்டத்தில் உள்ள படங்கள் குறித்து பேசினார். அதேசமயம் அறிமுகம் இயக்குனர்களுக்கும் சில அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறியதாவது, “அந்த காலத்தில் உள்ள படங்களில் 10 தலையை வெட்டினால் அவர்களை வில்லன் என்கிறோம். ஆனால் இப்போது அதே மாதிரி 10 தலையை வெட்டுகிறவர்களை ஹீரோ என்கிறோம். தலையை வெட்டுங்கள் என்று இன்றைய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கிறோமா? என்று கேள்வி எழுப்பினார். படத்தின் மையக்கரு சரியாக அமைந்தால் படமும் நன்றாக அமையும். சமீபத்தில் ஒரு படத்தை பார்த்துவிட்டு இயக்குனரை தொடர்பு கொண்டு முதல் பாதி சூப்பராக இருக்கிறது. உங்களைப்போல் யாராலும் படம் எடுக்க முடியாது என்று பாராட்டினேன். அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அந்த இயக்குனர், இரண்டாம் பாதி சரியில்லை. ஒரு அப்பா எப்படி மகனை கொல்ல நினைப்பது. இது உண்மைக்கு புறம்பானதாக உள்ளது என்று நான் சொன்னதும் அந்த இயக்குனர் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்றும் திரும்ப அழைக்கிறேன் என்றும் போனை கட் செய்துவிட்டார். திரும்ப அழைக்கவே இல்லை. நான் படத்தின் ரிலீசுக்கு ஐந்து நாள் இருப்பதற்கு முன்பாகவே சொன்னேன். அதனால் அந்த ஐந்து நாட்களில் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்திருக்கலாம். ஆனால் படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் நான் என்ன சொன்னேனோ அதுபோலவே படத்தை கமெண்ட் செய்தனர்” என்று பேசினார்.
இந்த விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் சுட்டிக் காட்டியது லோகேஷ் கனகராஜையும் அவர் இயக்கிய லியோ படத்தையும் தான் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.