ரஜினியின் கூலி திரைப்படத்தில் சாய் அபியங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படம் ரஜினியின் 171 வது படமாகும். இதில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாகிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் அமீர்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று (டிசம்பர் 12) ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு சிக்குடு எனும் பாடலில் இடம்பெற்ற சில காட்சிகளை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் கூலி திரைப்படத்தில் கட்சி சேர, ஆசை கூட ஆகிய ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாய் அபியங்கர் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதனை சமீபத்தில் விழா மேடையில் பேசிய சாய் அபியங்கர், தான் கூலி படத்தில் அடிஷனல் ப்ரோக்ராமராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். மேலும் அனிருத்துடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சாய் அபியங்கர் ஏற்கனவே சூர்யா 45 படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.