சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜா கிளி படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா ஆகிய இருவரும் இணைந்து அப்பா, சாட்டை, விநோதய சித்தம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களின் காம்பினேஷனில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பேவரைட் படங்களாக அமைந்திருக்கிறது. அடுத்தது சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா ஆகிய இருவரும் இணைந்து ராஜா கிளி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்க வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் தம்பி ராமையா இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதி இப்படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் காரணமாக டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.