தமிழில் அனிமல் திரைப்படம்… ஹீரோவை குறிப்பிட்ட சந்தீப் ரெட்டி…
டோலிவுட்டில் இருந்து கோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலமும் சென்று அனைத்து மொழி ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் இயக்கிய அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தெலுங்கு மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் மாபெரும் ஹிட் அடித்தது. மாறுபட்ட கண்ணோட்டத்தில் படத்தை இயக்குபவர் சந்தீப். இப்படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. இதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்று ரீமேக் செய்தார்.
இதைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் அனிமல். இப்படத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. பலர் படத்திற்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.
இருப்பினும் சுமார் 800 கோடி ரூபாய் வசூலித்து பெரும் சாதனையும் படைத்தது அனிமல் படம். இந்நிலையில், அனிமல் படத்தின் தமிழ் பதிப்பு குறித்து பேசிய படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, தமிழில் ரன்பீர் கபூர் வேடத்தில் நடிக்க சூர்யா தான் எனது முதல் தேர்வு என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் நிகழ்ச்சியில் கூச்சலிட்டனர். மேலும், கார்த்தியும் அந்த கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக பொருந்துவார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.