நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று மக்களின் மனதை வெல்லும் நாயகனாக உருவெடுத்துள்ளார் நடிகர் சந்தானம். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சந்தானம். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் 80ஸ் பில்டப். இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, ஜான் விஜய் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். படத்தில் நகைச்சுவைக்கு ஈடாக சிறந்த கதைக்களம் இருப்பதாகவும், தெரிவித்துள்ளனர்.
வடக்குப்பட்டி ராமசாமியாக வரும் சந்தானம், பானை செய்து ஊர் மக்களை ஏமாற்றி விற்பதுமாக படத்தின் கதை நகர்கிறது. இடையே வரும் பகுத்தறிவு வசனங்களும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக தெரிவித்துள்ளனர். படத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் உள்பட பலரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், பல இடங்களில் கதாபாத்திரத்தை வலுக்கட்டாயமாக புகுத்தி இருப்பதாக விமர்சனம் தெரிவித்துள்ளனர். படத்தில் பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.