நடிகர் சந்தானம் அடுத்தடுத்த படங்களில் காமெடியனாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அதன்படி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஆனால் கடந்த பல வருடங்களாகவே காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டார் சந்தானம். அதன்படி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தான் கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் சந்தானம் காமெடியனாக பின்னி பெடல் எடுத்து இருந்தார். எனவே இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்தது.
அதைத் தொடர்ந்து விஷால், சுந்தர். சி கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திலும் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடிக்கப் போகிறார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் விஷால், சுந்தர். சி கூட்டணியில் உருவாகும் புதிய படமானது ஆம்பள 2 படமாக இருக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.