நடிகர் சந்தானம் ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, அதிக வசூலையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் கிக் மற்றும் 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்கள் வெளியானது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், சர்ச்சைகளையும் கிளப்பியது. அந்த ட்ரைலரில் ஈ. வெ. ராமசாமி என்று அழைக்கப்படும் பெரியாரை அவமதிக்கும் விதமான வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ‘அபாரக்கோ டபாரக்கோ’ எனும் முதல் பாடல் நாளை வெளியாக போவதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.