நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கியதாகவும் அதனால் சர்தார் 2 படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பிஎஸ் மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்திவுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன, ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. எனவே மைசூரில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும் போது நடிகர் கார்த்திக்கு விபத்து ஏற்பட்டு அவருடைய காலில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் படக்குழு படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு உடனடியாக சென்னை திரும்பி இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடிகர் கார்த்தியின் கால் வீக்கம் அடைந்து இருப்பதால் அவரை மருத்துவர்கள் ஒரு வாரம் ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. இந்த தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.