சீமான் தமிழ் சினிமாவில் மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் இவர் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது இவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் எல் ஐ கே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நல்ல படங்களை பாராட்டியும் வருகிறார் சீமான். இந்நிலையில் புதியவன் ராசையா என்பவர் இயக்கி இருக்கும் ஒற்றைப் பனைமரம் திரைப்படத்திற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது நவயுகா, மாணிக்கம் ஜெகன், தனுவன், அஜாதிகா புதியவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு அக்ஷயா இசையமைக்க மஹிந்த அபேசிங்கா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தயாரிக்கப்பட்டு பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. மேலும் இந்த படம் 2024 அக்டோபர் 25 ஆம் நாளில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்க கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றின் மூலம் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், “ஈழத் தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக ஒற்றைப் பனைமரம் திரைப்படம் உருவாகி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்கு போராடி தங்கள் உயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தை கொச்சைப்படுத்தும் யாதொரு பொய் பரப்பறையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை அல்ல. உலகத் தமிழர் உணர்வோடும் உயிரோடும் இரண்டறக் கலந்து விட்ட விடுதலைப் போராட்டம் அது. ஈழத்தில் வாழ்ந்த தொப்புள் கொடி உறவுகள் வன்முறையின் மீது காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இனவெறி சிங்களவர்களின் இன வழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு தமிழர் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையிலான அகிம்சை போராட்டம் தான்.
கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் இனவாத இலங்கை அரசின் கொடிய அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட தோல்வி அடைந்த பிறகு வேறு வழியில்லாமல் தான் பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிக்கப்பட்ட ஒன்று. எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதை மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தமிழர்கள் தள்ளப்பட்டன என்பதே வரலாற்று பேருண்மை. போராடினாலும் இறப்போம். போராடாவிட்டாலும் இறப்போம். ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தில் தான் அடிமை வாழ்வினை விட உரிமைச் சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்ற பிறகே என் இனச் சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர். 2009 ஆம் ஆண்டு 20 நாடுகள் கூடி தமிழ் ஈழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மண் விடுதலைக்குப் போராடி வீர காவியங்களான மாவீரத் தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்பவோ முயலும் எந்த ஒரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்று எச்சரிக்கிறேன். எனவே ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ஒற்றைப் பனைமரம் திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிடப்படக்கூடாது எனது திரையரங்க உரிமையாளர்களுக்கு அன்புடன் கோரிக்கை வைக்கிறேன். இந்த படத்தை திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டுப் போராடும் நிலைக்கு எங்களை தள்ள மாட்டீர்கள் என நம்புகிறோம். தமிழ்நாடு அரசு இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு தேவையற்ற சட்டம் – ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிட விடாமல் தடுக்க இது அறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார் சீமான்.
- Advertisement -