Homeசெய்திகள்சினிமாபாலிவுட் ஜாம்பவான் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பாலிவுட் ஜாம்பவான் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

-

ஷாருக்கான் பாலிவுட்டின் கிங் காங் என்று அழைக்கப்படுபவர். பாலிவுட் பாஷா என்றும் கிங் ஆஃப் ரொமான்ஸ் என்றும் ரசிகர்களால் குறிப்பாக ரசிகைகளால் கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. டெல்லியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஷாருக்கானின் ஆரம்பகால வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை. பெற்றோர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட சகோதரியை கவனித்துக்கொள்ளும் கடமையும் ஷாருக்கானுக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் ‘தில் டரியா’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
அடுத்து அவர் நடித்த ஃபவுஜி என்ற தொலைக்காட்சி தொடருக்கு கிடைத்த நல்ல விமர்சனங்கள் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தது. மும்பை வந்த ஷாருக்கானை ‘தில் ஆஷ்னா ஹை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார் நடிகை ஹேமமாலினி. அன்று தொடங்கிய ஷாருக்கானின் திரைப்பயணம் 32 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவரை முன்னிலையில் வைத்துள்ளது. 90 களில் பெரும்பாலான படங்களில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த அவரை ரசிகைகள் தங்களது காதலனாகவே கொண்டாடினார்கள். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தாலும் அவர் வெளிப்படுத்திய உடல் மொழி, முகபாவனைகள் ரசிகர்களை கட்டிப்போட்டன.

அர்ப்பணிப்புடன் தனது கதாபாத்திரத்தை அணுகும் ஷாருக்கான் சினிமாவில் மட்டுமன்றி, தொழிலதிபராகவும் தன்னை நிரூபித்துக் காட்டியவர். தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் என இரண்டிலும் வெற்றி கண்டார். 2005-ம் ஆண்டு பத்மபூஷண் விருது பெற்ற பாலிவூட் கிங் கான் ஃபிலிம்வேர் விருதிற்கு 30 முறை பரிந்துரைக்கப்பட்டு 15 முறை விருதுகள் பெற்று இருக்கிறார். இந்நிலையில், நடிகர் ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில், பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ