ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். இந்த படத்தை தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லீ இயக்குகிறார். இதில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கௌரி கான் இந்த படத்தை தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது. மேலும் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
அதை தொடர்ந்து படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியானது. இந்நிலையில் ஜவான் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதுவும் அடுத்த வாரத்தில் இந்த விழாவை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.