‘இந்தியன் 2‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996 இல் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் இந்தியனாக வரும் சேனாதிபதி தாத்தாவின் கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது.
இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இந்தியன் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தலைப்புடன் ZERO TOLERANCE என்ற டேக் லைன் இடம்பெற்றுள்ளது. இப்படமானது கொரோனா காலகட்டத்திற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு பின்னர் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும் இன்னும் ஒரு சில பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ஏறத்தாழ இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்தியன் 2 படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி இந்த படமானது 2024 ஜூன் மாதத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனேகமாக இந்த படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. எனவே படத்தின் டீசர், ட்ரெய்லர் போன்றவை இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.