உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் இந்தியன் 2. இப்படம் இதே கூட்டணியில் 1996 இல் வெளியான “இந்தியன்” படத்தின் தொடர்ச்சியாக வெளியாக உள்ள இரண்டாம் பாகம் என்பது உலகம் அறிந்த செய்தி. இந்தியன் 2 படத்தை ஒரு சாபம் எனவே திரைத்துறையில் கிசுகிசுக்கும் அளவுக்கு படம் தொடங்கப்பட்ட நாள் முதலே இப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். 2020 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்தால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உதவி இயக்குனர்கள் பலர் காயம் அடைந்தனர், கமல் ஷங்கர்,காஜல் அகர்வால் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர். பின்னர் கொரோனா வைரஸ் தொற்றால் லாக் டவுன் போடப்பட்டு படமும் கிடப்பில் கிடந்தது. அதைத்தொடர்ந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விவேக் திடீரென மரணம் அடைந்தார். இதுபோன்ற பல பிரச்சினைகள் இந்தியன் 2வை விடாமல் துரத்தி வந்தன. இதையெல்லாம் கடந்து ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்து விட்டதாம்.எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் படம் எப்படி இருக்கும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வெற்றிகரமாக படப்பிடிப்புகள் முடிவடைந்தவுடன் லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியும் பகிர்ந்து கொண்டனராம்.
மேலும் 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.