நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் சிம்பு நிதியுதவி
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு, நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் வெங்கல் ராவ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சண்டை கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி 20 வருடங்கள் ஆக சண்டை கலைஞராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் பெரும்பாலான திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அவருடன் சேர்ந்து வெங்கல் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மனதை கவர்ந்தன. இதுதவிர ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கல் ராவ், தமிழ் திரைப்படங்கள் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களிலும் வடிவேலுவுடன் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆந்திராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அண்மையில் கை, கால் செயல்படாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் வெங்கல் ராவ், தனது சிகிக்சைக்கு உதவி செய்யுமாறு நடிகர், நடிகைகளிடம் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக திரைப்பட நடிகர்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். அத்துடன் நடிகர் சிம்பு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.