நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு தனது 48வது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அதேசமயம் நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திலும் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் நடிகர் சிம்பு, தக் லைஃப் படத்தில் நடிக்க தடை விதிக்க கோரி பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
அதாவது ஏற்கனவே ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கொரோனா குமார் என்ற படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிப்பதற்கு ரூ. 4 கோடி வரை முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும் ஆனால் அதன் பிறகு கொரோனா குமார் படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக தான் ஐசரி கணேஷ் சிம்பு, தக் லைஃப் படத்தில் நடிக்க கூடாது என்று புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஐசரி கணேஷ், “நடிகர் சிம்பு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.