நடிகர் சிம்பு பத்து தல படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது 48வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதன்படி அந்த படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பது தெரியவந்தது. இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான நிலையிலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆகவே சிம்பு பக்காவாக பிளான் போட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே நடிகர் சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
தற்போது தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்திருப்பதை படக்குழுவினர் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த வீடியோவை பார்க்கும் போது நடிகர் சிம்பு, காளை பட லுக்கில் ஸ்டைலிஷாக தோற்றமளிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி திரிஷா, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், அபிராமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பதும் படப்பிடிப்பானது தற்போது புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.